திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில்.

 திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில்.

திருவானைக்கோயில் எங்கே உள்ளது எனக்கேட்டால் எல்லோரும் திருச்சிக்கு அருகில் உள்ள கோயில் என்று கூறுவார்கள். திருச்சிக்கு அருகே உள்ளது #திருவானைக்காவல்.. ஆனால் இது திருவானைக்கோயில்.#திருக்கழுக்குன்றம் வட்டத்தில்இதுஅமைந்துள்ளது.#திருவானைக்கோயில் புராதனமான ஊராகும்.இங்கு #திருவாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.புராதன கதையில் வாலி இறைவனை வணங்கியதால் இங்குள்ள இறைவன் #திருவாலீஸ்வரர் என அழைக்கப்படுகின்றார்.






#ஊர் அமைவிடம்:-
#திருக்கழுக்குன்றதிலிருந்து #பொன்விளைந்த களத்தூர் சென்று அங்கிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தூரம் சென்றதும் சிறிது தூரத்தில் வலதுபுறம் உள்ள மலைகளுக்கு நடுவில் சென்றால் இருளர் காலணிக்கு அடுத்து அமைந்துள்ளது.#திருக்கழுக்குன்றதிலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் பில்லேரிமேடுவில் பிரியும் சாலையில் சென்றால் சேகண்டி கிராமம் தாண்டியதும் இந்த ஊர் வருகின்றது.
#கல்வெட்டில் உள்ள தகவல்:-
தூங்கானை மாட வடிவில் உள்ள இந்த கோயில் பிற்கால சோழர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. விக்கிரம சோழனுடைய கல்வெட்டு கி.பி.1127 திருவாலீஸ்வரர் கோயிலை திருவாலக்கோயில் என்கின்றது.இரண்டாம் குலோத்துங்கனுடைய அரசு அதிகாரி அநபாய மூவேந்த வேளான் என்பவன் உழுலூர் என்கின்ற ஊரின் ஓரு பகுதியை அரும்பாக்கத்துடன் இணைத்து அநபாயநல்லூர் என மாற்றி வழிபாட்டுக்காக அதனை அளித்துள்ளான்.இந்த கோயிலில் 16 கல்வெட்டுக்கள் உள்ளன. கி.பி.1128ல் சந்திரசேகர மூர்த்தி வழிபாட்டுக்கு சிறுதண்டல் கிராமம் வழங்கப்பட்டுள்ளது.கி.பி.1220 ல் சென்னை மயிலாப்பூர் வியாபாரி ஒருவர் இங்கே விளக்கெரிக்க வழி செய்துள்ளான்.விஜயநகர மன்னரான கம்பண்ணன் கோயில் திருப்பணி செய்து பங்குனி விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளான்.லிங்கராயன் இந்த திருத்தொண்டில் 1365 ஆம் ஆண்டில் ஈடுபட்டுள்ளான்.இரண்டாம் அரிகரன் காலங்களிலும் கோயிலுக்கு தானங்கள் அளிக்கப்பட்டுள்ளன.காங்கேய பல்லவராயர் தன் மகள் பொன்னியார் நலத்திற்கு தானங்கள் அளித்துள்ளார்.குலோத்துங்க சோழ திருநீற்றுச் சோழநல்லூர் என்ற ஊர் புதியதாக உருவாக்கப்பட்டு இந்த கோயிலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. நென்மேலி என்கின்ற கிராமத்தின் ஒரு பகுதியே இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.காளாமுகம் என்ற சைவத்தின் பிரிவைச் சார்ந்த கோமடத்து ஞானராசி பண்டிதர் மற்றும் சைவராசி பண்டிதர் பற்றிய விவரங்கள் கல்வெட்டில் உள்ளது. சென்னை திருவெற்றியூர் போன்று திருவானைக்கோயிலிலும் காளாமுகப்பிரிவினர் தங்கியிருந்த ஊர் திருவானைக்கோயில் எனலாம்.இந்த ஊர் நாட்டியபெண்கள் மற்றும் கைக்கோளர்களுக்கு மதுராந்தகத்தின் வடவெல்லையான வீட்டுரில் வீட்டு மனைகள் அளிக்கப்பட்டுள்ளன.முதல் இராஜநாராயண சம்புவராயன் என்ற மன்னன் புண்டரீக நல்லூரைக்கைக்கோளர்களுக்கு மானியமாக அளித்துள்ளான்.புண்டரீக நல்லூர் நரியஞ்சேரி என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது.சுந்தரபாண்டியன் ஆட்சிக்காலத்தில் இவ்வூர் கோயிலில் விளக்கெரிக்க 6 பசுக்களை புஷபகிரி ஜீயர் அளித்துள்ளார்.விஜயநகர வேந்தரான கிருஷ்ணதேவராயரின் முகவரான மூட்டுக்கனகராயன் என்பவர் கோயிலில் திருவிழாக்கள் நடைபெற ஏற்பாடு செய்துள்ளதை செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.
#ஆலய அமைப்பு:-


ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கோயில் என்பது கோயினை பார்க்கும் சமயம் நமக்கு தெரியவருகின்றது.


ஆலயத்திற்கு வெளியே வினாயகர் சிலையும் ஜெஷ்டா தேவி சிலையும் அமைந்துள்ளது.


இறைவன் பெயர் #திருவாலீஸ்வரர். இறைவி பெயர் #திரிபுரசுந்தரி..இறைவன் கிழக்கு பார்த்து உள்ளார். இறைவி தெற்கு பக்கம் பார்த்து உள்ளார். கிழக்கு பக்க வாசல் கருங்கல் ஜன்னலால் அமைக்கப்பட்டுள்ளது. ஜன்னலுக்கு வெளியே நந்தி உள்ளது




ராஜநந்தி என அதனை அழைக்கின்றனர். கோயிலுக்கு தெற்கு பார்த்த வாசல் நாம் தெற்கு பார்த்த வாசல்வழியே உள்ளே நுழையவேண்டும்.கருவரையின் முன்பு வினாயகர் மற்றும் முருகர் சிலைகள் அமைந்துள்ளன. வினாயகர் வித்தியாசமான தோற்றத்தில் அமைந்துள்ளார்.

இறைவன் சுயம்பு லிங்கம். லிங்கம் எதிரே சிறிய நந்தி –பலிபீடம் அமைந்துள்ளது. திரிபுரசுந்தரி அம்மன் 4 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் நமக் கு அருள்பாலிக்கின்றார். கருவரையை சுற்றி வருகையில் #வினாயகர்,#தட்சிணாமூர்த்தி.#விஷ்ணு,#பிரம்மா,#தூர்கை சிலைகள் அமைந்துள்ளன.













ஒவ்வொரு சிலையின் கீழேயும் பக்கவாட்டிலும் அழகிய சிறிய சிற்பங்கள் அமைந்துள்ளன. மகளிர் சிறப்பினை –இறைவழிபாட்டை விளங்குவதாக அவை உள்ளன.

வெளிபிரகாரம் இரண்டு அடி உயரத்தில் இரண்டு அடுக்காக அமைந்துள்ளது.


இறைவனுக்கு அருகிலும் சுற்றி வரலாம். மேலே உள்ள பிரகாரத்திலும் சுற்றிவரலாம்.கருவரையை சுற்றி நிறைய கல்வெட்டுக்கள் உள்ளன. தமிழில் ஓரளவு புரியும் அளவில் அமைந்துள்ளது சிறப்பாகும். தூர்கைஅம்மன் அருகில் வேப்பமரம் அமைந்துள்ளது.
#ஆலய சிறப்புகள்:-
கிழக்கு பக்கம் அமைந்துள்ள ஜன்னல் சாரளத்தின் வழியே சூரிய வெளிச்சம் லிங்கத்தின் மீது விழும் நிகழ்வு வருடத்திற்கு இரண்டு முறை நடைபெறுகின்றது. அதுபோல வினாயகர் மீதும். முருகப்பெருமான் மீதும் சூரிய கதிர்கள் விழுகின்றன. மாசி மாதம் வருகின்ற பௌர்ணமியில் அம்மன் மீது சூரிய கதிர்விழுகின்றது. வருடத்தின் குறிப்பிட்ட நாளில் அனைத்து சிலைகள் மீதும் சூரியஒளி பாய்கின்றது. வழக்கமாக கோயில்களில் நாம் நினைத்தது பலிக்குமா என பார்க்க குங்குமம்.விபூதி பெட்டலம் மடித்து ஸ்வாமிபாதத்தில்வைத்து எடுத்து வந்து கொடுப்பார்கள். நாம் எதை நினைத்து எடுக்கின்றோமோ அது வந்தால் ஸ்வாமி நமக்கு உத்தரவு கொடுத்துவிட்டதாக நம்புவோம். சில ஆலயங்களில் பூ வைத்து பார்பார்கள். இந்த ஆலயத்தில் நாம் வேண்டுதல் சொன்னால் அர்ச்சகர் நம்மை கருவரையில்எதிரில் விட்டு விட்டு வெளியில் சென்று விடுகின்றார். நாம் இறைவனை மனமுருக வேண்டிக்கொள்ளலாம். நாம் எண்ணிய எண்ணம் பலிக்குமானால் கருவரையிலிருந்து வௌவால் பறந்து வருகின்றது. சில சமயம் பல்லி உள்ளே இருந்து ஒடிவருகின்றது. சிலருக்கு பாம்பு உருவில் இறைவன் வந்து உத்தரவு கொடுத்ததாக அர்ச்சகர் தெரிவித்தார்.நான் இறைவனை வணங்கிய சமயம் வௌவால் உள்ளேஇருந்து பறந்து வந்தது. ஜீவ ராசிகள் வருவது மூலம் இறைவன் உத்தரவு கொடுத்ததை நாம் உறுதி படுத்திக்கொள்ளலாம். கோயிலில் குறிப்பிடதக்க விஷேஷம் என்னவென்றால் இங்குள்ள இறைவனுக்கு சுத்தமான பசும்பாலினால் காலை மற்றும் மாலையில் அபிஷேகம் நடைபெறுகின்றது.ஒவ்வொரு பிரதோஷ வழிபாடு,பௌர்ணமி –அமாவாசை வழிபாடு,கிருத்திகை வழிபாடு மற்றும் அனைத்து விஷேஷநாட்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் உண்டு.கோயில் சிறிய தாக இருந்தாலும் மன அமைதி பெரியதாக நமக்கு கிடைக்கின்றது. நேரம் கிடைக்கும் சமயம் ஆலயம் சென்றுவாருங்கள்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்