வேலன்:-திருக்கழுக்குன்றத்தின் தீர்த்தங்கள்.

புகழ்பெற்ற திருக்கழுக்குன்றத்தில் மொத்தம் 16 புண்ணிய தீர்த்தங்கள் இருந்திருக்கின்றது. அவைகள் எங்கு எங்கு எந்த நிலையில் உள்ளது என பார்க்கலாம்.


1.சங்கு தீர்த்தம்.

உலகப்புகழ் பெற்ற சங்குதீர்த்த குளம் சுமார் 13 ஏக்கர் பரப்பளவு கொண்டது. வழக்கமாக கடல்  நீரில் பிறப்பதாக சொல்லப்படும் சங்கு இங்கு நன்னீரில் பிறப்பது சிறப்பு. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இங் கு சங்கு பிறக்கும். அதனாலேயே இதனை சங்கு தீர்த்தம் என அழைக்கின்றனர்.கடந்த 01.09.2011  அன்று இத்திருக்குளத்தில் சங்கு பிறந்தது.ஒரு மண்டலம் -48 நாட்கள் குளித்து மலைவலம் வந்தால் சித்தபிரமை தீரும் என்பது உண்மை.நோய் தீர்க்கும் தீர்த்தம் என்பது சிறப்பாகும். கங்கா நதி.காவிரி நதி.சரஸ்வதி நதி.வைதாளி நதி.கோமகி நதி.பொன்முகி நதி.தெனகுமரி நதி.தேவிகை நதி.கம்பை நதி போன்ற அனைத்து நதிகளிடமும் சிவபெருமான கூறியதாவது:-
"காணினும் கைதொடினும் அள்ளித்தெளிப்பினும் உட்கொளினும்;-கணப்பொழுது முழ்கினும்-கால் வழுக்கி வீழினும் பாணிவிரி திரையின் ஒரு பனித்திவலை படினும் படரும் காற்றனுகினும் மெய்ப்பாதகம் குடிபோம் சேலைகு தொழுமிந்த தடந்தோறும் நீர் முகந்து செலும் அடியோர் அயமேகத்திற நகராம. விரதம் பூனுமவர் படிந்தியற்றில் அனந்தமெனப்பலிக்கும் புராரி என்றும் தீர்த்தம் என்றும் இரண்டில்லை இப்புரிக்கே" என கூறியுள்ளார்.
குரு பகவான் கன்னிராசிக்கு பிரவேசிக்கும் காலம் புஷ்கர மேளா நடைபெறும். அதுசமயம் இந்த குளத்தில்  நீராடுதல் சிறப்பாகும். அன்று மாலை நடைபெறும் லட்ச தீப பெருவிழா காண கண்கோடி வேண்டும். சமீபத்தில் 02.08.2016 அன்று இவ்விழா நடைபெற்றது.


2. ருத்ர தீர்த்தம்:-

இங்கு சங்கு தீர்த்த குளத்திற்கு தெற்கு பகுதியில் ருத்ராங்கோயில் அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவனை தேவகணங்கள்.முனிவர்கள்.வழிபட்ட திருக்கோயில் இது.ஏழு மங்கையரும்.முருகக்கடவுளும்.வசிஷ்டர் விசுவாமித்திரர் அகத்தியர் ஜனக முனிவர் அகலிகை முதலியோர் தவம் செய்து அவரவர் வேண்டுதல் நிறைவேற்றியதாக ஐதிகம். ருத்ரர்கள் இறைவனை வேண்டி இத்தலத்திற்கு ருத்ர தீர்த்தம் எனவும்.இத்தலம் ருத்ராங்கோயில் எனவும். இங்குள்ள சிவன் ருத்ர கோடீஸ்வரர் எனவும் வழங்க வேண்டி அதன்படியே இத்தலம் வழங்கப்படுகின்றது.
3.வசிஷ்ட தீர்த்தம்:-

இது ருத்திரான்கோயிலில் உள்ள  ஓசூரம்மன் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது. இங்கு வசிஷ்டர் பல வேள்விகள் செய்து சிவனருள் பெற்றதால் இதற்கு வசிஷ்ட தீர்த்தம் என பெயர் உண்டாயிற்று. இங்குள்ள அம்மனை வெள்ளிக்கிழமம் விரதம் இருந்து வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும். இக்குளத்தில் மூழ்கி சிவனை வசிஷ்டர் வேண்டியதாக வரலாறு உண்டு. அம்மன் அருளாளல் குழந்தை பாக்கியம் இல்லாவர்களுக்கு குழந்தை பெற்றதாக சொல்வதுண்டு.


4. அகத்திய தீர்த்தம்:-

இந்த குளம் கருங்குழி போகும் வழியில் வெள்ளாழ தெரு முனையில் அமைந்துள்ளது.இங்கு அகத்தியர் தவம் செய்ததால் இது அகஸ்தியர் தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது.சுந்தர மூர்த்தி நாயனார் கழுக்குன்ற ஈசனை பூஜிக்க வந்தபோது இக்குளத்தில நீராடி எழுந்த போது சிவ காட்சி பெற்று பொன்பெற்றார் அத்தகைய சிறப்பு வாய்ந்தது இந்த தீர்த்தம்.அதன் காரணமாக இன்றும் சித்திரை திருவிழா நடைபெறும் நான்காம் நாள் திருவிழா உற்சவத்தில் இறைவன் தெற்கு வாசல் வழியாக வந்து தீர்த்தத்தின் அருகில் மண்டபத்தில் வைத்து சுந்தரருக்கு பொற்றாளம் அளிக்கும் போது அன்புடன் இறைவன் இடம் உபதேசம் பெறுகிறார்.
5. மார்க்கண்டேய தீர்த்தம்:-

அகத்திய தீர்த்தத்திற்கு வடக்கு. தாழக்கோயிலுக்கு தென்மேற்கிலும் வயல்வெளிக்கு நடுவில் அமைந்துள்ளது. அருகிலேயே ஆலமரமும் அம்மன்கோயிலும் உள்ளது. மார்க்கண்டேய முனிவர் இறைவனை வணங்கி அருள்பெற்ற இடம் .எனவே இது மார்க்கண்டேய தீர்த்தம் என அழைக்கப்படுகின்றது.6.ஞான தீர்த்தம்:-


இந்த தீர்த்தம் மார்க்கண்டேய தீர்த்தத்திற்கு வடக்கு புறத்தில் அமைந்துள்ளது. ஆனால் அங்கு சென்று பார்த்தால் குளத்தினை காணவில்லை..குளத்தின் அருகே மண்டபமும் வினாயகர் கோயிலும்.ஆலமரமும் உள்ளதாக சொன்னார்கள். தேடிக்கொண்டிருக்கின்றோம்.

7.கௌசிக தீர்த்தம்:-

இது மலைக்கு வட மேற்கில் அமைந்துள்ளது.கொளசிக முனிவர் இதில நீராடி சிவனை வழிபட்டதால் இவர் பெயரே இக்குளத்திற்கு அமைந்துள்ளது. பேச்சு வழக்கில் ஆண்டரசன் குளம் -ஆண்டர்சன்குளம் என்றும் அழைக்கப்படுகின்றது. இது வன்னிய தெரு முடிவில் உள்ளது.
8.அகலிகை தீர்த்தம்:-

அகலிகை வேதமலை ஈசனை வணங்கிடவும் அவள் பாவ விமோசனம் பெற்று நலம் அடைந்திடவும் தேவர்களும் முனிவர்களும் தொழுதிடும் கழுக்குன்ற ஈசனிடம் வந்தபோது இந்த குளத்தில் நீராடி சிவனை வழிபட்டதால் இது அகலிகை தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது. தற்காலத்தில இது வெள்ளை குளம் என்று அழைக்கப்படுகின்றது.9.வருண தீர்த்தம்:-

மலை வலம் வரும் சமயம் நவகிரக கோயிலுக்கு பின்புறம் இந்த தீர்த்தம் உள்ளது. வருண பகவான் இக்குளத்தில் நீராடி பின்னர் இறைவனை வழிபட்டதால் வருண தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது. இதன் அருகிலேயே கோடி வினாயர் ஆலயம் உள்ளதால் கோடிவினாயர் தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகின்றது.
10. சுந்தர  தீர்ததம்:-

நால்வர்கோயில் பேட்டை -தேவஸ்தானத்திற்கு சொந்தமான பயணிகள் விடுதி அருகில் உள்ளது. சுந்தரர்  இங்குள்ள குளத்தில் நீராடி இறைவனை வேண்டியதால் இது சுந்தர தீர்த்தம்  என்று அழைக்கப்படுகின்றது.
11.இந்திர தீர்ததம்:-

இது நால்வர் கோயில் பேட்டையில் நால்வர் கோயில அருகில் உள்ளது. அப்பர் சுவாமிகள் இக்குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டதாக பதிகம் உள்ளது. இறைவனடிகளார்கள் இறைவனை வழிபட இக்குளத்தில் ;தினம் நீராடி இறைவனடி சேர்ந்ததால் இது இந்திர தீர்த்தம் என அழைக்கப்படுகின்றது.


12. சம்பு தீர்த்தம்:-

இந்த தீரத்தம் மாமல்லபுரம் சாலையில் கொத்திமங்கலத்தில் அமைந்துள்ளது. இதன் கரையில ஆலமரமும்.முனிஸ்வரர் ஆலயம் உள்ளது. சம்பாதி மற்றும் சடாயு போன்ற பல முனிவர்கள் இக்குளத்தில் மூழ்கி சிவனை வழிபட்டு முக்தி அடைந்தார்கள். அதனாலேயே இது சம்பு தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது.
13. லட்சுமி தீர்த்தம்:-

ஒரு முறை சிவனை காண திருமால் கயிலாயம் சென்றபோது வேதமலை(திருக்கழுக்குன்றம்) வந்து என் திருக்காட்சியை காண்பாயாக என அழைத்தார் அதன்படியே திருமால் இங்கு வந்து லட்சுமி சமேதராக இக்குளத்தில நீராடி இறைவனை வழிபட்டார்.அப்போது திருமாலிடம் லட்சுமி தேவி இக்குளத்திற்கு என்ன பெயர் என வினவினார். சகல சம்பத்துக்களும் தரும் நீயே இங்கு நீராடியதால் இது லட்சுமி தீர்த்தம் என வழக்கட்டும் என்றும் இக்குளத்தில் நீராடி இறைவனை வழிபடுபவர்கள் வாழ்வில லட்சுமி கடாச்சம் கிட்டும் என வரம் வழங்கினார். அதன்படியே இக்குளம் லட்சுமி தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது.

14.நந்தி தீர்த்தம்:-

இறைவனை நந்தி இந்த குளத்தில் நீராடி வழிபட்டு இறையடி சேர்ந்ததால் இது நந்தி தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது. இது தாழகோயில் உள்புறம்அமைந்துள்ளது. 15.பட்சி தீர்த்தம்:-

வேதமலை மீது பட்சி உணவருந்தும் பாறைக்கு அருகில் இந்த தீர்த்தம் உள்ளது. இரண்டு பாறைகளுக்கு இடையே இந்த தீர்த்தம் உள்ளது. கடுமையான  வறட்சியிலும் இக்குளத்தில் உள்ள நீர்வற்றியது இல்லை. கடும் பிணிஉள்ள நாய் குளத்தில் விழுந்து பிணி நீங்கி சென்றதாக வரலாறு உண்டு. பட்சிகள் நீராடுவதால் இது பட்சி தீர்த்தம் என அழைக்கப்படுகின்றது.

திருக்கழுக்குன்றத்தில் மொத்தம் 16 தீர்த்தங்கள் உள்ளதாக சொல்கின்றார்கள். மதுளம் குப்பத்தில் ஒரு குளம் உள்ளதாக சொல்கின்றார்கள். அதுபற்றிய விவரம்தெரியவில்லை. அதுபோல மலை மேலே நரிக்குளம் உள்ளது. அது தீர்த்தங்கள் வரிசையில் வருமா என தெரியவில்லை..காணமல் சென்ற குளங்களை தேடிக்கொண்டிருக்கின்றோம்....பேருராட்சியிலோ - திருக்கோயில் அலுவலகத்திலோ - தாலுக்கா அலுவலகத்திலோ இதற்கான விவரங்கள் கிடைக்கும் என எண்ணுகின்றேன். தகவல்கிடைத்தால் அதனையும் பதிவிடுகின்றேன். 

திருக்கழுக்குன்றத்தில் உள்ள தீர்த்தங்கள் காண்கையில் மூன்று தீர்ததங்களை தவிர மற்ற தீர்த்தங்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குளங்களை புதியதாக வெட்ட வேண்டாம். இருக்கின்ற..
குளங்களையாவது பராமரிக்கலாம் அல்லவா...
ஆண்டவனும் ஆள்பவர்களும் மனதுவைத்தால்தான் உண்டு...
நமது ஊர்..நமது குளம்...நமது பெருமை..அதனை காப்பது நமது கடமை...

வாழ்க வளமுடன்
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

1 கருத்துகள்:

Subramanian Srinivasan சொன்னது…

good job

கருத்துரையிடுக